பன்னிரு சைவத் திருமுறைகளும் திருமுறை ஆசிரியர்களும்:

சைவத் திருமுறைகள் பன்னிரண்டுள், முதல் 11 திருமுறைகள் வரை தொகுக்கப் பெற்ற காலம் 11ஆம் நூற்றாண்டு, தொகுத்தருளியவர் திருநாரையூரில் தோன்றிய 'நம்பியாண்டார் நம்பிகள்' எனும் அருளாளராவார்.

பின்னர் 12ஆம் நூற்றாண்டில் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த 'பெரிய புராணம்' எனும் 'திருத்தொண்டர் புராணம்' 12ஆம் திருமுறையாகச் சேர்க்கப் பெறுகின்றது.

இப்பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தோர் மொத்தம் 27 அருளாளர்கள், 27 நட்சத்திரங்களைப் போன்று சைவ வானில் ஒளிர்பவர்கள்.

1, 2, 3 திருமுறைகள் (தேவாரம்):

திருஞானசம்பந்தர் அருளியவை.

4, 5, 6 திருமுறைகள் (தேவாரம்):

நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் அடிகள்) அருளியவை.

7ஆம் திருமுறை (தேவாரம்):

சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது.

8ஆம் திருமுறை (திருவாசகம், திருக்கோவையார்):

மாணிக்கவாசகர் அருளியவை.

9ஆம் திருமுறை (திருவிசைப்பா, திருப்பல்லாண்டு):

இதன் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளோர் மொத்தம் 9 அருளாளர்கள்.

1.திருமாளிகைத் தேவர்
2.சேந்தனார்
3.கருவூர்த்தேவர்
4.பூந்துருத்தி நம்பி
5.கண்டராதித்தர்
6.வேணாட்டடிகள்
7.திருவாலியமுதனார்
8.புருடோத்தம நம்பி
9.சேதிராயர்

இவற்றுள் திருப்பல்லாண்டினைச் சேந்தனாரின் திருப்பாடல்களும், 'திருவிசைப்பா' எனும் தொகுப்பில்  சேந்தனார் உள்ளிட்ட 9 ஆசிரியர்களின் திருப்பாடல்களும் இடம்பெறுகின்றன. 

10ஆம் திருமுறை (திருமந்திரம்):

திருமூலர் அருளியது.

11ஆம் திருமுறை (பொதுப் பாடல்களின் தொகுப்பு):

இதனை அருளிச் செய்துள்ளார் மொத்தம் 12 ஆசிரியர்கள்.

1. திருஆலவாய் உடையார்
2. காரைக்கால் அம்மையார்
3. ஐயடிகள் காடவர்கோன்
4. சேரமான் பெருமாள்
5. நக்கீரதேவர்
6. கல்லாடதேவர்
7. கபிலதேவர்
8. பரணதேவர்
9. இளம்பெருமான் அடிகள்
10. அதிரா அடிகள்
11. பட்டினத்துப் பிள்ளையார்
12. நம்பியாண்டார் நம்பிகள்

12ஆம் திருமுறை (பெரிய புராணம்):

சேக்கிழார் பெருமான் அருளியது.

திருமுறை ஆசிரியர்களின் பாராயணத் துதி:

திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாதவூரர் மற்றைத்
திருமாளிகைத் தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளுபூந்துருத்தி நம்பி
வருஞான கண்டராதித்தர் வேணாட்டடிகள்
வாய்ந்த திருவாலியமுதர்
மருவு புருடோத்தமர் சேதிராயர் மூலர்
மன்னு திருஆலவாயர்
ஒரு காரைக்காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர்கீரர் கல்லாடனார்
ஒண் கபிலர் பரணர் மெய்உணர் இளம்பெருமானோடு
ஓங்கும் அதிராஅடிகளார்
திருமேவு பட்டினத்(து) அடிகளொடு
நம்பியாண்டார் நம்பி சேக்கிழாரும்
சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டு அருள்செய்த
தெய்விகத் தன்மையோரே.

திருமூலர் தோன்றிய காலம் என்ன? (ஆதார பூர்வ விளக்கங்கள்):

திருமூலர் 63 நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப் பெறுபவர் என்பதும், பன்னிரு சைவத் திருமுறைகளுள் 10ஆம் திருமுறையான திருமந்திரத்தின் ஆசிரியர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இனி திருமூலர் தோன்றிய காலம் குறித்து இப்பதிவினில் சிந்தித்துத் தெளிவுறுவோம்.

7ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவதரித்த சுந்தர மூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டர் தொகையில் 'நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்' என்று போற்றுகின்றார். ஆதலின் திருமூல நாயனார் 7ஆம் நூற்றாண்டிற்கு முன் தோன்றிய அருளாளர் எனும் முடிவிற்கு எளிதாக வந்து விடலாம்.

இனி பெரிய புராணத்தில், 'திருமூல தேவ நாயனார்' பகுதியில் இடம்பெறும் பின்வரும் இரு திருப்பாடல்களில், திருமூலரின் அவதார காலக் குறிப்புகளைக் காண்போம்,

திருமூலர் ஆண்டொன்றிற்கு ஒரு திருப்பாடல் வீதம் '3000 திருப்பாடல்களைக் கொண்ட திருமந்திரத் தொகுப்பினை நிறைவு செய்துள்ளார்' என்று தெய்வச் சேக்கிழார் பின்வரும் திருப்பாடலில் பதிவு செய்கின்றார்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 26):
ஊனுடம்பில் பிறவிவிடம் தீர்ந்துலகத்தோர் உய்ய
ஞானமுதல் நான்குமலர் நல் திருமந்திரமாலை
பான்மைமுறை ஓராண்டுக்கொன்றாகப் பரம்பொருளாம்
ஏன எயிறணிந்தாரை ஒன்றவன் தானென எடுத்து!!!

'திருமூல நாயனார் இப்புவியில் 3000 ஆண்டுகள் வாழ்ந்திருந்து, 3000 தமிழ்ப் பாமாலைகள் புனைந்துப் பின்னர் சிவமுத்திப் பதம் பெற்றுத் திருக்கயிலை ஏகினார்' என்று பின்வரும் திருப்பாடலில் ஐயத்திற்கு இடமின்றி மற்றொரு முறை பதிவு செய்கின்றார் சேக்கிழார் அடிகள்,

(பெரிய புராணம்: திருமூல தேவ நாயனார் புராணம்: திருப்பாடல் 27):
முன்னியஅப் பொருள்மாலைத் தமிழ்மூவாயிரம் சாத்தி
மன்னிய மூவாயிரத்தாண்டு இப்புவிமேல் மகிழ்ந்திருந்து
சென்னி மதியணிந்தார் தம் திருவருளால் திருக்கயிலை
தன்னில்அணைந்து ஒருகாலும் பிரியாமைத் தாளடைந்தார்.

ஆதலின் திருமூல நாயனார் இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே (அதாவது தற்பொழுது நடந்தேறி வரும் கலியுகத்தின் துவக்க கால கட்டத்திலேயே) தோன்றியுள்ளார்' என்பது தெளிவு. 

எம்பிராட்டி திலகவதியாரைப் போற்றும் நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 1):

இளம் பிராய நிகழ்வுகளை முதற்கண் நினைவு கூர்ந்துப் பின்னர் தன் தமக்கையாரின் தவமேன்மைச் சிறப்பினால் 'சிவமூர்த்தியின் திருவருளுக்கு தான் உரியரான நிகழ்வினை' இத்திருப்பாடலில் பதிவு செய்து போற்றுகின்றார் திருத்தாண்டக வேந்தர்,

('கொக்கரை குழல்' என்று துவங்கும் ஆரூர் திருப்பதிகம் - திருப்பாடல் 6) 
எம்மையார்இலை யானும் உளேன்அலேன்
எம்மையாரும் இதுசெய வல்லரே
அம்மை யார் எனக்கென்(று) அரற்றினேற்(கு)
அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே!!!

(பொருள்)
இளம் பிராயத்திலேயே தாய்; தந்தையரை இழந்தேன், சிறு வயதினன் ஆதலின் இவ்வுலக வாழ்வைத் தனித்து எதிர்கொள்ளும் திறமின்றி இருந்தனன். எம் தமக்கையார் யாவுமாய் விளங்கி எம்மைக் காத்தருள வல்லவரே, எனினும் அவரும் இச்சமயம் 'தன் இன்னுயிர் துறப்பேன்' என்று துணிந்துள்ளார் (நிச்சயிக்கப் பெற்ற மணமகன் இறந்துபட்ட காரணத்தால்). 

'இனி அம்மையப்பராய் இருந்து எம்மைக் காப்பார் யாருளர்? என்று கதியற்றுப் பதறியிருந்த நேரத்தில், பின்னாளில் எம்மைப் புறச்சமய நெறியினின்றும்  நீக்கிச் சிவமாம் மெய்நெறிக்கு ஆட்படுத்த வேண்டியிருந்த காரணத்தால், திலகவதியாரைத் துறவு நெறியில் செலுத்தி, தாய்;தந்தை; குரு என்று யாவுமாய் விளங்குமாறு மீண்டும் அப்பிராட்டியாரை எமக்கு அளித்தருளினார் ஆரூர் இறையவர்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் சுவாமிகள். 

எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நெகிழ்விக்கும் திருப்பாடல் வரிகள் இவை. ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி!!!

திருநாவுக்கரசர் திருப்பாடல்களில் ஆறுமுகக் கடவுள் பற்றிய அற்புதக் குறிப்புகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 2):

நம் அப்பர் சுவாமிகள் சுமார் 20 முதல் 30 திருப்பாடல்களில் கந்தப் பெருமானைப் பல்வேறு திருநாமங்களால் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார். இவற்றுள் 'நம் கடம்பனை', 'நம் செந்தில் மேய' என்று நெருக்கம் கலந்த உரிமையோடு குறிக்கும் சொற்பிரயோகங்கள் மிக இனிமையானவை, நெகிழ்விக்கக் கூடியவை. இனி இப்பதிவில் கந்தவேளைக் குறிக்கும், இவ்விதமான சிறப்புச் சொல்லாடல்களோடு கூடிய 10 திருப்பாடல்களைச் சிந்தித்து மகிழ்வோம், 

(1) ('வடியேறு திரிசூலம்' என்று துவங்கும் திருப்பூவணம் தேவாரம்: திருப்பாடல் 4)
பன்னிரண்டு கையுடைய பிள்ளை தோன்றும்

(2) ('வேழம்பத்(து) ஐவர்' என்று துவங்கும் திருக்கோழம்பம் தேவாரம் - திருப்பாடல் 10)
சமர சூரபன்மாவைத் தடிந்த வேற்குமரன் தாதை

(3) ('மாசிலொள்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 5)
விரி நீர்பரவைச் சூரட்ட வேலவன் தாதை

(4) ('மறையணி நாவினானை' என்று துவங்கும் திருப்பெருவேளூர் தேவாரம் - திருப்பாடல் 3)
குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை 

(5) ('மின்னும் சடை'  என்று துவங்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் தேவாரம் - திருப்பாடல் 6)
வள்ளி முலைதோய் குமரன் தாதை

(6) ('தூண்டு சுடரனைய' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம் - திருப்பாடல் 4)
நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத் தாதை 

(7) ('ஒன்றுகொலாம்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 6)
ஆறுகொலாம் அவர்தம் மகனார் முகம்

(8 ) ('அல்லிமலர்' என்று துவங்கும் திருஇன்னம்பர் தேவாரம் - திருப்பாடல் 2)
'கோழிக் கொடியோன்தன் தாதை போலும்'

(9) ('அரவணையான்' என்று துவங்கும் திருவதிகை தேவாரம் - திருப்பாடல் 1)
சரவணத்தான் கைதொழுது சாரும்அடி

(10) ('தளரும் கோளரவத்தோடு' என்று துவங்கும் கடம்பூர் தேவாரம் - திருப்பாடல் 9)
நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

ரிக் வேதத்தைப் போற்றும் நாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 3)

சைவம் உள்ளிட்ட அறுவகைச் சமயங்களுக்கும் அடிப்படையாகவும், அடிநாதமாகவும் விளங்குவது (சிவபரம்பொருள் அருளியுள்ள) ரிக்; யஜுர்; சாம அதர்வணமாகிய நால்வேதங்களே. 'வடமொழியில் அமைந்துள்ள இந்நான்கு வேதங்களுக்கும் சைவ சமயத்திற்கும் தொடர்பில்லை' என்பது போன்ற தொடர்ப் பொய்ப் பிரச்சாரங்கள் பல்கிப் பெருகி வரும் இக்கால கட்டத்தில், தக்க அகச் சான்றுகளோடு மீண்டும் மீண்டும் இது குறித்துத் தெளிவுறுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

'ரிக்' எனும் வடமொழிச் சொல்லை 'ருக்' என்று தமிழாக்கியும், (ராமனை 'இராமன்' என்று எழுதுமாற் போல), ருக் வேதத்தை 'இருக்கு வேதம்' எனும் சொல்லாடலோடு நம் அருளாளர்கள் தத்தமது பாடல்களில் கையாண்டு வந்துள்ளனர்.  

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் ரிக் வேதத்தினைச் சிறப்பித்துப் போற்றும் திருப்பதிகப் பாடல்களை அறிந்துணர்ந்து போலிப் பிரச்சாரங்களைப் புறந்தள்ளுவோம், 

(1) ('மறையும் ஓதுவர்' என்று துவங்கும் 'திருப்பேரெயில்' தேவாரம் - திருப்பாடல் 6)
திருக்கு வார்குழல் செல்வன சேவடி
இருக்கு வாய்மொழியால் தனைஏத்துவார்
சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார்அவர் பேரெயிலாளரே
-
(குறிப்பு: பேரெயிலில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்தி 'ரிக் வேத மந்திரங்களால் தொழுவோரின்' துயர்களைப் போக்கியருள்வார் என்று அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்)

(2) ('சிட்டனைச் சிவனை' என்று துவங்கும் 'திருப்பாண்டிக்கொடுமுடி' தேவாரம் - திருப்பாடல் 5)
நெருக்கி அம்முடி நின்றிசை வானவர்
இருக்கொடும் பணிந்தேத்த இருந்தவன்
திருக்கொடும்முடி என்றலும் தீவினைக்
கருக்கெடும்இது கைகண்ட யோகமே
-
(குறிப்பு: 'விண்ணுறைத் தேவர்கள் கூட்டமாக நின்று ரிக் வேத மந்திரங்களால் பணிந்தேத்தும் தன்மையில், திருபாண்டிக்கொடுமுடி இறைவர் எழுந்தருளி இருக்கின்றார்' என்று போற்றுகின்றார் நம் அப்பர் பெருமானார்)

(3) ('கடலகம் ஏழினோடும்' என்று துவங்கும் 'திருஆப்பாடி' தேவாரம் - திருப்பாடல் 3) 
எண்ணுடை இருக்குமாகி இருக்கினுள் பொருளுமாகிப்
பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கராகிக்
கண்ணொரு நெற்றியாகிக் கருதுவார் கருதலாகாப்
பெண்ணொரு பாகமாகிப் பேணும் ஆப்பாடியாரே
-
(குறிப்பு: 'ரிக் வேத சுவரூபமாகவும் அவ்வேதம் சுட்டும் முதற்பொருளாகவும் திருஆப்பாடி இறைவர் விளங்குகின்றார்' என்று சிறப்பிக்கின்றார் நம் தாண்டக வேந்தர்)

(4) ('தொண்டனேன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 1)
தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியி(ல்) நன்னீர்
கொண்(டு) இருக்கோதி ஆட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டை கொண்டேற நோக்கி ஈசனை எம்பிரானைக்
கண்டனைக் கண்டிராதே காலத்தைக் கழித்தவாறே!!!
-
(குறிப்பு: 'ரிக் வேத மந்திரங்களால் போற்றியவாறு சிவலிங்கத் திருமேனிக்கு தீர்த்த நீராட்டாமல் காலத்தைப் போக்கினேனே' என்று வருந்திப் பாடுகின்றார் நம் நாவுக்கரசு சுவாமிகள்)

(5) ('பொருப்பள்ளி' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 5)
பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
    பெருங்கோயில் எழுபதினோ(டு) எட்டும் மற்றும் 
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
    கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்
    இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
    தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே!!!
-
(குறிப்பு: சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் வகைகளைப் பட்டியலிடும் நம் அப்பர் சுவாமிகள், 'மறையவர்கள் ரிக் வேத மந்திரங்களை ஓதி வழிபடும் இடம் இளங்கோயில்' என்று இத்திருப்பாடலில் பதிவு செய்கின்றார்)

(6) ('வேத நாயகன்' என்று துவங்கும் பொதுப் பதிகம் - திருப்பாடல் 8 )
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கல் மனவரே!!!
-
(குறிப்பு: இத்திருப்பாடலில் 'ரிக் முதலான நான்மறைகள்' என்று ஐயத்திற்குச் சிறிதும் இடமின்றி சைவ சமய அன்பர்களுக்கு நம் அப்பர் அடிகள் தெளிவுறுத்துகின்றார்) 

ஷேத்திரங்களின் திருப்பெயர்களைப் பாராயணம் புரிவதால் விளையும் நற்பலன்கள் (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 4)

'பிதற்றாய் பிறைசூடி தன் பேரிடமே' என்று ஷேத்திரக் கோவையில் ஞானசம்பந்த மூர்த்தி அறிவுறுத்துகின்றார். அம்முறையில் நம் அப்பர் சுவாமிகளும் சிவத்தலங்களின் திருப்பெயர்களைப் போற்றுவதன் மேன்மையையும், அதனால் விளையும் அளவிலா நற்பலன்களையும் பின்வரும் அற்புத அற்புத திருப்பாடல் வரிகளால் பட்டியலிடுகின்றார், 

(1) ('நேர்ந்தொருத்தி ஒருபாகத்(து)' என்று துவங்கும் பொதுத் திருப்பதிகத்தில் இடம்பெறும் முதல் 9 திருப்பாடல்களின் இறுதி இரு வரிகள்)

பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில்
    பொல்லாப் புலால் துருத்தி போக்கலாமே

நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில்
நிலாவாப் புலால்தானம் நீக்கலாமே

ஐயாறே ஐயாறே என்பீராகில்
அல்லல் தீர்ந்தமருலகம் ஆளலாமே.

பழனம் பழனமே என்பீராகில்
பயின்றெழுந்த பழவினைநோய் பாற்றலாமே.

சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில்
துயர்நீங்கித் தூநெறிக்கண் சேரலாமே

வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில்
வல்வினைகள் தீர்ந்து வான்ஆளலாமே

கண்டியூர் கண்டியூர் என்பீராகில் 
கடுகநும் வல்வினையைக் கழற்றலாமே

குடமூக்கே குடமூக்கே என்பீராகில் 
கொடுவினைகள் தீர்ந்தரனைக் குறுகலாமே

வெண்காடே வெண்காடே என்பீராகில்
வீடாத வல்வினை நோய் வீட்டலாமே

(2) ('மட்டுவார் குழலாளொடு' என்று துவங்கும் திருச்சிராப்பள்ளி தேவாரம் - திருப்பாடல் 3)
அரிச்சிராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை
நரிச்சிராது நடக்கும் நடக்குமே
-
(குறிப்பு: 'திருச்சிராப்பள்ளி' எனும் திருப்பெயரினைக் காதலோடு போற்றுவோரின் தீவினைகள் (அத்தலத்துறை இறைவரான தாயுமான சுவாமியின் பேரருளால்) வேரோடு அழிந்துபடும். இது சத்தியம்; சத்தியமே என்று அறுதியிட்டுக் கூறுகின்றார்.

இராவணன் சிவ பக்தனா? (அப்பர் தேவார நுட்பங்கள் - பகுதி 5)

முதற்கண் இராவணன் பரம்பொருளான சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டு வரங்களைப் பெற்றவன் அல்லன், படைப்புக் கடவுளான பிரமனை வேண்டித் தவமிருந்து வரங்களைப் பெற்றவன். இதனைப் பின்வரும் திருப்பாடலில் 'அயன் அருளினில்' என்று ஞானசம்பந்த மூர்த்தி குறிக்கின்றார்,
-
(சம்பந்தர் தேவாரம் - 'புவம்வளி' என்று துவங்கும் திருச்சிவபுரப் பதிகம் - திருப்பாடல் 8 )
அசைவுறு தவ முயல்வினில் அயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசை கயிலையை எழுதருவகை இருபது கரம்அவை நிறுவிய 
நிசிசரன்.. 

இனி இப்பதிவில் நம் அப்பர் சுவாமிகள் இராவணன் தொடர்பாகப் பதிவு செய்துள்ள முக்கியக் குறிப்புகளையும் உணர்ந்து தெளிவுறுவோம், 

(1)

இராவணன் புஷ்பக விமானத்தில் விண்ணில் செல்லுகையில், திருக்கயிலை மலை எதிர்ப்பட, தேர் தடைப்பட்டு நிற்கின்றது. 'ஆதிப்பரம்பொருள் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் அச்சமின்றி, 'நான் முன்னேறிச் செல்ல இம்மலை தடை செய்வதோ?' என்று கடும் ஆணவத்துடன் அதனைப் பெயர்க்க முனைகின்றான். இதுவோ சிவபக்தியின் குறியீடு? 

'பெற்ற வரபலத்தினால், அறிவில்லாமல் திருக்கயிலை மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று அப்பர் சுவாமிகள் பின்வரும் திருப்பாடலில் சாடுகின்றார்,
-
('பன்னிய செந்தமிழ்' என்று துவங்கும் திருஎறும்பியூர் தேவாரம் - திருப்பாடல் 10)
அருந்தவத்தின் பெருவலியால் அறிவதின்றி
அடலரக்கன் தடவரையை எடுத்தான் 

(2)

'இறைவரும் இறைவியும் எழுந்தருளியுள்ள திருமலை' என்று ஒருசிறிதும் மதியாது 'அம்மலையைப் பெயர்க்க முயன்றான் இராவணன்' என்று பின்வரும் திருப்பாடலில் அப்பர் அடிகள் பதிவு செய்கின்றார்,
-
('வடிவுடை மாமலை' என்று துவங்கும் திருநாகைக்காரோண தேவாரம் - திருப்பாடல் 9)
கருந்தடம் கண்ணியும் தானும் கடல்நாகைக் காரோணத்தான்
இருந்த திருமலை என்றிறைஞ்சா(து) அன்றெடுக்கலுற்றான்

(3)

'எண்தோளானே எம்பெருமான் என்றேத்தா இராவணன்' என்று 'இராவணன் இந்நிகழ்வு வரையில் சிவபெருமானிடத்து பக்தி கொண்டிருந்தவன் அல்லன்' என்று அப்பர் சுவாமிகள் தெளிவுறுத்துகின்றார்,
-
('தோற்றினான் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருநெய்த்தான தேவாரம் - திருப்பாடல் 10)
...எண்தோளானே
எம்பெருமான் என்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை

(4)

'இராவணன் நேர்மையற்றவன்; நன்மை அறியாதவன்' என்று பின்வரும் திருப்பாடல்களில் அப்பர் சுவாமிகள் பதிவு செய்கின்றார்,
-
('தோற்றினால் எயிறு கவ்வி' என்று துவங்கும் திருஅவளிவணல்லூர் தேவாரம்)
நிலைவலம் வல்லன் அல்லன் நேர்மையை நினைய மாட்டான் (திருப்பாடல் 4)
நன்மை தான் அறிய மாட்டா(ன்) நடுவிலா அரக்கர் கோமான் (திருப்பாடல் 6) 

(5)

('தேரையு(ம்) மேல் கடாவி' என்று துவங்கும் திருமறைக்காடு தேவாரம்)
வலியன்என்று பொத்திவாய் தீமை செய்த பொருவலி அரக்கர்கோன் (திருப்பாடல் 7)
மிக்கமா மதிகள் கெட்டு வீரமும் இழந்தவாறே (திருப்பாடல் 8 )

(இறுதிக் குறிப்பு)
பின்னாளில் இராவணன் கைக்கொண்ட சிவபக்தியானது '1000 வருடங்கள் திருக்கயிலை மலைக்கடியில் சிக்குண்ட அச்சத்தின் வெளிப்பாடே', அன்றி அது சிவபெருமானிடத்து உள்ள அன்பினால் இயல்பாகத் தோன்றிய பக்தி அன்று. வலி பொறுக்க இயலாமல்; இசைபாடி மன்னிப்பு வேண்டிப் பாடியதால், கருணைக் கடலான சிவமூர்த்தி திருவுள்ளம் கனிந்து (அவனுடைய இக்குற்றத்தை மட்டும் மன்னித்து) நாளும் வாளும் தந்தருள் புரிகின்றார்.